கொங்கு 24 நாடுகள்

கொங்கு நாட்டில் குடியேறிய வேளாளர்கள் நிர்வாக வசதிக்காகத் தாம் வாழும் நாட்டில் 24 நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்தினர். அவ்வாறு ஏற்படுத்திய ஒவ்வொரு நாடுகட்கும் ஒரு அவை இருந்தது. அதில் எல்லா ஊர்களுக்கும் அங்கம் அளிக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி நாட்டுக் காரியங்களைச் செய்தனர்.

கோயில்கட்குக் கொடைகள் அளித்தனர். ஆலயத் திருப்பணியை மேற்கொண்டனர். குற்றவாளிகளை விசாரித்துத் தண்டித்தனர். நாட்டுக்கு வேண்டிய எல்லாப் பணிகளையும் செய்தனர். இந்நாடுகள் தல சுய ஆட்சியை மேற்கொண்டது. இது தமிழ்நாட்டின் வேறு எப்பகுதியில் இல்லாத ஒன்றாகும்.
கீழ்க்கண்டவாறு 24 நாடுகளாகும்.

1. பூந்துறை நாடு
2. தென்கரை
3. காங்கேய நாடு
4. பொங்கலூர் நாடு
5. ஆறை நாடு
6. வாரக்க நாடு
7. திருவாவினன் நாடு
8. மண நாடு






9. தலைய நாடு
10. தட்டய நாடு
11. பூவாணிய நாடு
12. அரைய நாடு
13. ஒடுவங்க நாடு
14. வடகரை நாடு
15. கிழங்கு நாடு
16. நல்லுருக்கா நாடு






17. வாழவந்தி நாடு
18. அண்ட நாடு
19. வெங்கால நாடு
20. காவடிக்கா நாடு
21. ஆனைமலை நாடு
22. இராசிபுர நாடு
23. காஞ்சிக்கோயில் நாடு
24. குறும்பு நாடு






இவைகளைத் தொகுத்துப் பாடலாகவும் பாடினர்


சொல்ல அரி தானபூந்தது துறைசைதென் கரைநாடு
தோன்றுகாங் கேயநாடு
தோலாத பொன்கலூர் நாடு திகழ் ஆறையளி
தோய்ந்தவர் ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு ஆவிநன் குடிநாடு
மணநாடு தலையநாடு
வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம்
வடகரை கிழங்கு நாடு
நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட
நாடு வெங் காலநாடு
நாவலர்கள் சொல்கா வடிக்காநாடு ஆனைமலை
இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில்
இயல்செறி குறும்நாடு
இனியபுகழ் சேர்கொங்கு மண்டலந் தனிலான
இருபத்து நான்குநாடே

பிற்காலத்தில் நாடுகள் 24-ஐக் காட்டிலும் அதிகம் ஆயிற்று, வெங்கால நாட்டின் இணை நாடாக இடைப்பிச்ச நாட்டுடன் சேர்த்துக் கொள்ளப்பெற்றது.

கொங்கு நாடுகள் என்பது பொதுவான வழக்கு இதனை ‘நாலாறுநாடு’ என்ற இயக்கியத் தொடர் காட்டும். ‘மூவெட்டுநாடு’ எனக் கூறுவதும் உண்டு.

மக்கள் பெருக்கமும், குடியேற்றமும் பிற்காலத்தில் ஏற்பட்டபோது கொங்கு 24 நாடுகள் 42 நாடுகள் எனக் கூறபட்டன அவை:

தாராபுரம் சூழ்ந்தநாடு - 24
கோட்டை சூழ்நாடு - 6
குன்றத்தூர்க் கோட்டம்- 12
நாடுகளாகப் பிரித்து கூறப்படும். கோட்டை என்பது தணாயக்கன்கோட்டை, குன்றத்தூர் என்பது சங்ககிரியாகும். அண்மையில் கிடைத்த ஒரு செப்பேட்டு ஆவணம் கொங்கு 72 நாடுகள் எனக் கூறுகிறது. 24 நாடுகளை 24 கோட்டம் என அழைக்கும் வழக்கமும் உண்டு.