தோற்றமும் குடியேற்றமும்

கொங்கு வேளாளர் தோற்றமும் குடியேற்றமும்


புராணம்:

வீராட்சி மங்கலம் கந்தசாமிக் கவிராயர் அவர்கள் வேளாளபுராணம் என்னும் நூலை மிகவும் அழகிய கவிதைகளால் பெருங்காவியமாகப் பாடினார். அதில் வேளாளர் தோற்றம் பற்றி புராண ஜதீகங்களுடன் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

அந்நூலை அழகிய உரைநடை வடிவில் கோவை விளாங்குறிச்சி நா. மருதாசலக் கவுண்டர் அவர்கள் ஆக்கியளித்துள்ளார்கள். அதில் கீழ்வருமாறு வேளாளர் தோற்றம் கூறப்படுகிறது.

கைலாசத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும்போது நான் முகன் உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட வசதிகளை மக்௧ள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வில்லையே என்று முறையிட்டார். சிவபெருமான் நான் முகனிடம் திருமாலைச் சென்று பார்க்குமாறு பணித்தார்.

திருமாலிடம் நான்முகன் முறையிடும்போது போதாயன முனிவர் வந்தார். போதாயன முனிவரை அறிமுகப்படுத்தி அவரையே வேண்டிய ஏற்பாடு செய்யுமாறு திருமால் வேண்டினார்.

உண்ணத் தெரியாமல், உணவைப் படைக்கத் தெரியாமல் இருந்த உலகுக்குக் கங்கைத்தாயின் அருகேயுள்ள திருவேணி சங்கமத்திலிருந்து ஒரு மரபாளனை உற்பத்தி செய்து அவனுக்குச் சகல செய்திகளையும் கற்பிக்குமாறு போதாயனருக்குத் திருமால் ஆணையிட்டார்.

கங்கா தேவியின் சன்னிதானத்தில் மரபாளனைப் பெற்றுத் தன்னோடு இந்திரலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று போதாயன முனிவர் வேண்டினார்.

தான் பெற்ற மரபாளனை இரு கைகளாலும் பரிந்து எடுத்து உச்சிமோந்து ஆனந்த முத்தங்கள் தந்து பொன்னுலகு சென்று சிறப்பெல்லாம் பெற்றுப் போதாயனருடன் மண்ணுலகு செல்க மகனே என்று கங்காதேவி அனுப்பி வைத்தாள்.

இந்திரன் எல்லா இன்பங்களையும் குறைவறப் பெற்றிடுக என வாழ்த்தினான். இந்திரன் மரபாளனைச் சரியாசனத்தில் இருக்கச் செய்து பார் முழுதும் ஏர் முனையைத்தான் நம்பியுள்ளது.சகல பிணிகளிலும் தலையான பசிப்பிணியை தீர்க்க ௨ழவுவைத்தியத்தைத் தவிர வேறு உண்டோ? உழவுத் தொழில் இல்லாமல் உலகில் என்னதான் நடக்கும் இதற்கு இணையான தொழில் ஏதுமில்லை என்றான்.

இந்திரன், குபேரன் இவர்கள் பெண்மக்களை மணந்த மரபாளன் (வேளாளன்) பூமிக்கு வந்து பயிர்த்தொழில் செய்ய முற்பட்டான். கங்கையின் அருளால் தோன்றியமையால் வேளாளர் கங்கா குலத்தினர் என அழைக்கப்பட்டனர். Top


பட்டயம்:

அவ்வாறு தோன்றிய வேளாளர்கள் தொண்டை நாட்டிலிருந்து சோழநாடு வழியாகக் கொங்கு நாட்டில் குடியேறினார்கள் என்பதைப் பட்டயங்கள் பல கூறுகின்றன. பெரிய குலத்துத் தலைவர்கள் வேணாடுடையார் பட்டயம் கீழ்வருமாறு கூறுகிறது. பகிறிச் சோழன் ராசாவின் மகள் தனக்குச் சீதனம் கொடுத்த படியினாலேயே சேரமான் பெருமான் கொங்கு மண்டலத்துக்கு கொங்கு வேளாளார் என்று பெயரும் கொடுத்துப் பிடாரன் வேணுடையானுக்குப் பட்டாபிஷேகமும் சூட்டி எண்ணாயிரம் கோத்திரத்துக்குப் பெரிய கோத்திரம் எண்ணாயிரம் வீட்டுக்கும் பெரிய வீடு என்று கொங்கு மண்டலத்துக்கு அழைத்து வந்ததன் பேரில் இருளுறைந்த காண்டாவனம் எல்லாம் வெட்டிக் கிராமம் உண்டுபண்ணினான் என்பது பட்டயப்பகுதியாகும். Top